
அக்காலத்தில், ஒவ்வொரு அரச குடும்பத்திலும் ஒரு குலகுரு இருப்பார். அவர் அரச குடும்ப சிறார்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராகவும், பெரியவர்களுக்கு வாழ்வியலை கற்றுத்தருபவராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருப்பார். இன்றைய தலைமுறையில், நமது ஒவ்வொரு குடும்பமும் அரச குடும்பத்திற்கு இணையான வசதிகளுடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம், ஒன்றைத்தவிர!! குடும்பங்களில் பெரியோர் என்று யாருக்குமே மதிப்பு மரியாதை கிடையாது என்பது அப்பட்டமான உண்மை!!!

கருத்து சுதந்திரம் என்ற போதையில் Vice-Chancellor யே நிற்கவைத்து மாணாக்கர்கள் கேள்வி கேட்டு கலாட்டா செய்யும் அளவிற்கு சமூகம் சீரழிந்து விட்டது. இனி பெரிய அளவில் எந்த புரட்சியும் அமைதியின்மையைத்தான் விளைவிக்கும்.

இச்சமூகம் அமைதி பெறவேண்டுமென்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி நிலவவேண்டும். மேலாதிக்க மீடியாக்களின் இரும்புப்பிடியிலிருந்து குடும்பத்தினர் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ஒவ்வொரு குடும்பத்திலும் குலகுருவை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு குலகுருக்களை பெரியளவில் உருவாக்கவேண்டும்.

ஒரு ஊரில் ஆயிரம் குடும்பங்களிருந்தால், அந்த ஊரில் குறைந்தபட்சம், 10% , அதாவது 100 நல்லாசிரியர்கள் இருக்கவேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், நல்லாசிரியர்கள் கிடைப்பது அரிது. எனினும் அவர்களையும் சமூக பொறுப்புள்ள நாம்தான் உருவாக்கவேண்டும். கற்பிப்போரை மேலும் நல்வழியில் கற்பிக்கவைப்பது நம் கடமை.

நம்மூரில் இப்போது நிறையவே டியூஷன் சென்டர்கள் உள்ளன. ஒவ்வொரு டியூஷன் சென்டரும் பால்விகாஸ் கல்வி மையமாக மாறவேண்டும். வாரத்தில் 6 நாட்கள் அவர்கள் பள்ளிப்பாடங்களில் மாணாக்கர்களுக்கு டியூஷன் சொல்லித்தரட்டும். வார இறுதியில், ஞாயிற்று கிழமைகளில் பால்விகாஸ் நடத்தலாமே! நம்மூரில் அமைப்புசாரா எத்தனையோ கல்வியாளர்கள் உள்ளனர். நம் வீட்டிலேயே தாய்மார்கள் உள்ளனர். உலகத்தில் தாய்தான் அவள் பிள்ளைக்கு முதல் குரு. ஒவ்வொரு பெண்ணும் பால்விகாஸ் குருவாக உருவாகவேண்டும். அவர்கள் இல்லம் பால்விகாஸ் குருகுலமாக மாறவேண்டும்.

ஒவ்வொரு சமிதி கன்வீனரும் சமிதி சென்டரும் சாய் நிவாஸ் போன்ற சாய் மையங்களும் பால்விகாஸ் குருக்களை உருவாக்கும் மையங்களாக பரிணமிக்கவேண்டும். குருவின் இல்லமே கோயிலாக மாறவேண்டும். ஒவ்வொரு குருவும் 6 குழந்தைகளை வாரத்தில் ஒருநாள் அவர்கள் இல்லத்தில் வைத்து பால்விகாஸ் வகுப்புக்களை நடத்த முடியாதா?

நான் என்னுடைய பால்விகாஸ் பருவத்தில் எனது குரு காலம்சென்ற திருமதி. ஜானகி மாமி அவர்கள் வீட்டில்தான் அடுகளை படுகளையாக ஞாயிற்று கிழமை முழுதும் இருப்பேன். ஒன்று இரண்டு வருடங்களல்ல!! ஒன்பது ஆண்டுகள் முறையாக பால்விகாஸ் பயின்று ஸ்வாமியிடம் டிப்ளமோ இன் சத்ய சாய் எடுகேஷன் செர்டிபிகேட் வாங்கியுள்ளேன். அதன் பின் சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு பிரசாந்தி நிலையத்தில் அவார்டும் கிடைக்கப்பெற்றேன்.

என் வேலை, சுவாமி வேலை என்று என்றுமே பிரித்தறியேன். கம்பெனி வேலையாக இருந்தாலும் சரி, பாடம் சொல்லிக்கொடுப்பதாக இருந்தாலும் சரி சுவாமி அர்ப்பணமாக செய்தால் அதற்கான வெகுமதி நாம் எங்கிருந்தாலும் வீடு தேடி வரும் என்பது திண்ணம்!

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை. சுவாமி சொல்வதுபோல, வாழ்க்கை என்ற இரயில் வண்டி லௌகீகம் மற்றும் ஆன்மிகம் என்ற இணையான இருப்புப்பாதையில் சீராக பயணிக்கவேண்டும். அதற்கேற்ப, சாய் டெக்கில் நாங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வயிற்றுப்பிழைப்பிற்காக, வாழ்வதற்க்காக, கணிதம் மற்றும், அறிவியல் பயிற்றுவிக்கிறோம் !! ஞாயிற்றுக்கிழமைகளில் பால்விகாஸ் மற்றும் மனித திறன் மேம்பாட்டுக்கல்வி பயிற்றுவிக்கிறோம். எங்கள் குழந்தைகள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

நமது இலக்கு நல்லாசிரியர்களை உருவாக்குவதே. கற்போம் நம் மூச்சின் இறுதிவரை. கற்பிப்போம் நம் வருங்கால சந்ததியினர் என்றும் நம்மை நினைவில்கொள்ளுமளவுக்கு!! இக்கட்டுரை கண்டிப்பாக பல இடங்களில் சிறு சிறு அளவில் உயிர்த்தெழுந்து மிகப்பெரிய கல்விப்புரட்சி செய்யும் என்பது என் கண்முன்னே தெரிகிறது! வாட்ஸாப்பில் வெட்டிச்செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். கல்விச்செய்திகளை பரப்புங்கள். ஜெய் சாய்ராம்!

Let’s develope one SSS Family Mentor who can take care of at least 10 Families.
